சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்

370 0

201609161034393084_cauvery-issue-tamilnadu-bandh-dmdk-hungers-strike-in_secvpfகர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த ஒரு சில நாட்களாக சேலம், ஆத்தூர் பகுதியில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வெளியில் உணவு சாப்பிட்டதால் வயிற்று கோளாறும், காய்ச்சலும் ஏற்பட்டது. அவர் இன்று உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் அறிவுரை வழங்கியதால் உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்க முடியவில்லை.

தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அறவழியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் உண்ணவிரதம் இருந்து வருகின்றனர். தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த கூடிய போராட்டம் இது.

கடந்த 114 ஆண்டுகளாக கர்நாடக- தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தராததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் தமிழர்கள் வன்முறை கும்பலால் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழர்களுக்கு எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் தலைவர் விஜயகாந்த். ஒட்டு மொத்த தமிழர்களின் நலனில் அவருக்கு அக்கறை உண்டு. கர்நாடகாவை கண்டித்து முதலில் உண்ணாவிரதத்தை அறிவித்தவர் விஜயகாந்த் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரதத்தில் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், பார்த்தசாரதி, ஜாகீர் உசேன், உமாராஜ், தினகர், செந்தாமரை கண்ணன், ஆனந்தன், தளபதி, சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருப்பு சட்டை அணிந்தும் சில நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.