ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரிட்டனின் ‘பிரெக்சிட்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பதவியை வகிக்கும் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரிட்டனின் மக்கள் பெருவாரியாக வாக்களித்த பின்னர், இந்த முடிவுக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், எனது முடிவுகளை ஆதரிக்காவிட்டால் ஒருநாளும் பிரெக்சிட் நிறைவேறாது. குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலை நீங்கள் சந்திக்க நேரிடும் என தெரசா மே மிரட்டியதில் எதிர்ப்பு சற்றே தணிந்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பிரதமர் பதவியை வகிக்கும் நீங்கள் உங்கள் மன உளைச்சல்களில் இருந்து எப்படி ஆசுவாசப்படுத்தி கொள்கிறீர்கள் என்னும் கேள்விக்கு தெரசா மே சமீபத்தில் பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள நியூகேஸ்ட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு சென்ற தெரசா மேவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு , ‘ஓய்வு மற்றும் விடுமுறை நேரங்களில் எனது கணவருடன் சேர்ந்து நடக்கப் பிடிக்கும்.
நாம் சாப்பிடும் பொருளை நாமே சமைப்பது என்ற வகையில் சமையலில் மிகவும் ரசனையோடு ஈடுபடுவேன். நல்ல சமையல் குறிப்புகளுடன் கூடிய சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அதேபோல், போலீஸ் வாழ்க்கையை மையமாக வைத்து அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்.சி.ஐ.எஸ். தொடரை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.