கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.5 கோடிவரை பரிசு வழங்குகிறது.
வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஜூன் 1-ந் தேதி, ரூ.5 கோடிவரை உயர்த்தியது.
அதுபோல், பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடிவரை பரிசு வழங்கப்படும்.
அதற்காக ஒருவரே 2 திட்டங்களின் கீழ், மொத்தம் ரூ.6 கோடி பெற்றுவிட முடியாது. அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு மேல் கிடைக்காது.
இந்த பரிசுத்தொகையை பெற உரிய ஆவணங்களுடன் திட்டவட்டமான தகவல்களை அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர், தனிநபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்கலாம். ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான வரி ஏய்ப்பு பற்றி துல்லியமான தகவல்களை அளிக்க வேண்டும்.
இத்தகைய வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க வருமான வரி (புலனாய்வு) தலைமை இயக்குனரை அணுக வேண்டும். அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும்.
ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அசையும் அல்லது அசையா பினாமி சொத்துகள் பற்றியும் தகவல் அளிக்கலாம். பினாமி சொத்து பற்றி தகவல் அளிப்போர், வருமான வரி இணை ஆணையரை அணுக வேண்டும்.
தகவல் அளிப்பவர்கள், தங்களது தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் கருப்பு பண விவரம், கருப்பு பண பேர்வழிகள் விவரம், சொத்துகளின் முகவரி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் சொத்துகளின் மதிப்பு அடிப்படையில், வெவ்வேறு அடுக்கு கொண்ட பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் நிர்ணயித்துள்ளது. இடைக்கால பரிசு, இறுதி பரிசு என 2 கட்டங்களாக பரிசு வழங்கப்படும்.
1. கருப்பு பண சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்து பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.50 லட்சம்வரை வழங்கப்படும். இறுதி பரிசாக ரூ.5 கோடிவரை வழங்கப்படும். இருப்பினும், இறுதி பரிசுத்தொகைக்கு 10 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.
2. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வருமானம் அல்லது சொத்துகள் பற்றி தகவல் தெரிவித்தால், இடைக்கால பரிசாக ரூ.5 லட்சம்வரையும், இறுதி பரிசாக ரூ.50 லட்சம்வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.
3. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடிக்கு மேற்பட்ட ரொக்கம் பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.15 லட்சம் வரையும், இறுதி பரிசாக ரூ.1 கோடி வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.
தகவல்களை மதிப்பீடு செய்த 4 மாதங்களுக்குள் இடைக்கால பரிசுத்தொகையும், பினாமி சொத்துகளை பறிமுதல் செய்த 6 மாதங்களுக்குள் இறுதி பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
அதே சமயத்தில், தவறான தகவல் அளிப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.