செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
>நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நிலம் அகழப்பட்டது. மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வெளித்தெரிந்தன. அகழ்வுப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் சதீஸ்கரன் நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
எலும்புக்கூட்டின் எஞ்சிய எச்சங்கள், அகழப்பட்ட மண்ணுடன் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், அகழப்பட்ட மண்ணைப் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னரே எஞ்சிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி க.மயூரதன், நேற்றுக் காலை 11 மணிக்கு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றார். தடயவியல் (சோக்கோ) பொலிஸாரும், பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் இரண்டு பொலிஸ் அலுவலர்களுமே அங்கு முன்னிலையாகியிருந்தனர்.
பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சம்பவட இடத்துக்கு வரவில்லை. அங்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குரிய உபகரணங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை. சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் அகழ்வுப் பணியை ஒத்திவைத்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
நீதிமன்றத்தின் ஊடாக, அகழ்வுப் பணியை நேர்தியாக முன்னெடுப்பதற்குரிய ஒழுங்குகளுக்கு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.