பாம்புகளையும் சக உயிர்களாக மதித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு. பல காலமாக இந்தியாவில் பாம்புகள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்திருக்கின்றன. அது மட்டுமின்றி மண்புழுவைப் போல பாம்புகளும் விவசாயிகளின் நண்பனாகவே பார்க்கப்பட்டன. வயல்களில் விளைச்சல் அதிகமாகும் போது அதைத் தின்று எலிகளும் பெருகும். அது போன்ற சமயங்களில் அவற்றின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைப்பதற்குப் பாம்புகள் மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல பாம்புகளைப் பற்றி தவறான அபிப்பிராயம் மக்களிடையே தோன்றியது; ஆபத்தானதாக கருதத் தொடங்கினர், இன்று பாம்புகளின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டால் பெரும்பாலும் அடிப்பதற்குத்தான் முயல்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அதைப் பிடித்து வேறு சில பகுதிகளில் விடவும், அவற்றைக் காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள்.
பல காரணங்களால் பாம்புகள் அவை வசிக்கும் இருப்பிடங்களை விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து விடுகின்றன. எனவே அவை மனிதர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது போன்ற காரணங்களால் சில வகைப் பாம்புகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அதே நேரத்தில் பாம்புகளால் மனிதர்களின் பக்கமும் உயிர் இழப்புகளும் இல்லாமல் இல்லை. இந்தியா முழுவதும் பாம்பு கடிப்பதால் மட்டும் ஒரு வருடத்திற்கு 46,000 உயிரிழப்புகள் வரை நிகழ்கின்றன என்கிறது ஓர் அறிக்கை. அவை பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. அவசரத்திற்குச் சரியான போக்குவரத்து வசதிகள் கிடைக்காதது, மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இல்லாதது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.இது போன்று இரு தரப்பிலும் நிகழும் உயிரிழப்பைத் தடுக்க ஒரு கருவி ஒன்று உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னால் பயன்பாட்டிற்கும் வந்திருக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரசாதம் இண்டஸ்ட்ரீஸ் (Prasadam Industries) எனும் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது. கிராமங்களில் எப்பொழுதுமே ஒரு வழக்கம் உண்டு. வயல்களுக்குள்ளே நடக்கும் போது கையில் ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு தரையில் தட்டிக் கொண்டே செல்வார்கள்.
அதனால் ஏற்படும் அதிர்வு பாம்புகளை நடக்கும் பாதையில் இருந்து தள்ளிப்போகச் செய்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை அடிப்படையாக வைத்து மிகக் குறைந்த செலவில் பாம்புகளை துரத்தும் கருவியை வடிவமைத்திருக்கிறார் பிரசாதம் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான வீடோப்ரோட்டோ ராய்(Vedobroto Roy). கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதை சில கிராமங்களில் பயன்படுத்தவும் கொடுத்திருக்கிறார். பாம்புகள் அவற்றைச் சுற்றியிருக்கும் மிக நுண்ணிய அதிர்வைக் கூட உணரும் திறன் படைத்தவை, ஓர் இடத்தில் தொடர்ச்சியாக அதிர்வு வெளிப்படும் போது பாம்பு அந்த இடத்தில் தடை இருப்பதை உணர்ந்து விலகிச் செல்லும். இதை நடக்கும் போது கைகளில் எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு முறை தரையில் படும் போதும் நுண்ணிய அதிர்வலைகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது முழுமையாக சார்ஜ் ஆவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். அதன் பின்பு 24 மணி நேரம் செயல்படும் திறன் படைத்தது. இது சூரிய ஒளி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இதைத் தனியாக சார்ஜ் செய்யத் தேவையிருக்காது. நடக்கும் போது மட்டுமின்றி வயலில் வேலை பார்க்கும் போதும் கூட இதைப் பயன்படுத்த முடியும். இந்தக் கருவியின் அடிப்பகுதியைத் தரைக்குள் எட்டு இன்ச் ஆழத்தில் பதித்துவைக்க வேண்டும். ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு முறை தொடர்ச்சியாக தரை வழியாக அதிர்வலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.
எனவே இந்தக் கருவி இருக்கும் 50 மீட்டர் சுற்றளவிற்கு பாம்புகள் நெருங்காமல் விலகிச்சென்று விடும். “இந்தக் கருவியின் முக்கிய நோக்கமே மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே ஏற்படும் தாக்குதலை குறைப்பதுதான், சில கருவிகளை கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் சில இடங்களில் வழங்கியிருக்கிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது” என்கிறார் வீடோப்ரோட்டோ ராய். இந்தியாவில் காணப்படும் அனைத்து வகை பாம்புகளும் விஷம் உள்ளவை கிடையாது, ஒரு சில மற்றுமே ஆபத்தானவை. இந்தச் சிறிய கருவியால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.