இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது, அதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பொது விவகாரங்களுக்கான மையம் (பி.ஏ.சி) எனும் அமைப்பு ஆண்டுதோறும் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுவருகிறது. இந்த பட்டியலை நிர்வாகம், ஆட்சித் திறன் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து அந்த அமைப்பு பட்டியலை தயார் செய்கிறது.
இந்த அமிப்பு கர்நாடக மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. குடிநீர், சாலை, மின்சாரம், சாக்கடை போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைப்பதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டு தரவரிசை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மாநிலங்களின் ஆட்சித் திறன் பட்டியலை அந்த அமைப்பு பெங்களூருவில் நேற்று வெளியிட்டது. இதில், கேரள மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கேரளாவிற்கு அடுத்ததாக தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் தெலுங்கானா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3, 4, 5-வது இடங்களை பிடித்துள்ளன. பீகார் மாநிலம் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.