வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரிலுள்ள பழைய பேருந்து தரப்பிடத்தில் நின்று அங்கு வந்த பெண்ணொருவிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுத்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இதற்கிணங்க அப் பெண் ஏ.டி.எம். அட்டையை வங்கியொன்றில் செலுத்தி இரண்டு கட்டமாக பயணம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த நபர் ஒருவரிடம் அப் பணத்தை சரிபார்க்க கொடுத்தபோது குறித்த பெண் வைத்திருந்த ஏ.டீ.எம் அட்டைக்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லாமையினால் வங்கியில் காவல் கடமையிலிருந்த காவலாளிக்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அப் பெண் இராணுவ வீரரை இனங்காட்டியட்டியதுடன், அவர் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இராணுவ வீரரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் குதர்க்கமாக பதிலளித்ததுடன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பின்னர் அவரை மடக்கிப் பிடித்த பிரதேச வாசிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் பயன்படுத்திய ஏ.டி.எம். அட்டை பிறிதொருவருடையதென தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைதுசெய்த வவுனியா பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.