அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

248 0

மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலமாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தன் சம்பந்தியின் ‘பார்ட்னர்’ வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிவிடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லி துரைத்தனத்திடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய்கிழியப் பேசி வந்த அ.தி.மு.க பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க. – அ.தி.மு.க.” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டது.

திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறிவிட்டது. ஆகவே, அ.தி.மு.க. எம்.பி.க்களை வளைத்துப்போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க. – பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a comment