பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. மேலும், பாஜகவினர் பலரும் ராகுலின் செயலால் அதிருப்தி அடைந்து இவ்விவகாரத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமனிய சுவாமி, ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மோடி தன்னை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ராகுல் , பிரதமரை திடீரென கட்டித் தழுவியிருக்கக் கூடாது.
இதனால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான பாதுகாப்பை பற்றி என்ன கூறுவது ?. ராகுல் செய்தது முற்றிலும் நெறிமுறையற்ற செயல், இதனை ஊக்குவிக்கவும் கூடாது, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறவும் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.