வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு வேற்பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 08.45 மணியளவில் விநாயகப் பெருமானும், அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான், வேற் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தனர்.
பின்னர் பஞ்ச தீபாராதனை இடம்பெற்று வேற்பெருமானின் சித்திரத் தேரிற்கு முன்பாக குவித்து வைக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய் அடியவர்களால் உடைக்கப்பட்டது.
திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க இரதபவனி ஆரம்பமாகி நடைபெற்றது.