ஏப்ரல் 7, 2015 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புபடை ஆகியவற்றால் படுகொலை செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.எச்.சுரேஷ் அவர்கள் தலைமையில் செயல்பட்ட உண்மை கண்டறியும் குழு தமிழர் படுகொலையில் மேற்கூறப்பட்ட மூன்று அரசாங்க நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இதே கருத்தை தேசிய மனித உரிமை ஆணையமும் (NHRC) கூறியது.
கொல்லப்பட்ட தமிழர்களின் உடலின் கழுத்து மற்றும் மேற்பகுதியில் குண்டடி பட்டுள்ளது. அவர்கள் அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லபட்டதைக் காட்டுகின்றது. கொல்லப்பட்டவர்களின் உடலில் அவர்கள் கைகள் கட்டப்பட்டதற்கான தடங்கள் உள்ளன. மேலும் கொல்லப்பட்டவர்களின் கை, கால்கள், மூக்கு, விரல்கள் வெட்டப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும் இருந்ததாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ஆந்திர காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டதை நேரில் கண்டதாக சிலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
2002 இல் இதேபோல் 7 தமிழ்க் கூலிகள் இதே அரசு நிறுவனங்களால் கொல்லபப்ட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக பல தமிழ் தொழிலாளர்கள் காணாமல் போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு பணிபுரியும் சூழலில் தமிழர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு காணமலடிக்கவும் கொலையும் செய்யப்படுகின்றனர்.
அந்திர அரசின் புலனாய்வு குழு இந்த படுகொலைக்கும் அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த பின்பும் இந்திய அரசாங்கம் நடுநிலையான ஒரு விரசாரணையை தொடங்க தயாராக இல்லை. நீதி வழங்க யாருக்கும் அக்கரை இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.
அதே போல் சாதி ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வந்துள்ளதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். தாழ்த்தப்பட்ட தலித் இளைஞரான ஷங்கர் சாதி இந்து வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக கொடூரமான முறையில் சமீபத்தில் கொல்லப்பட்டது உட்பட, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 81 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தேறி உள்ளன. தாழ்த்தப்பட்ட தலித் ஆண்களோ பெண்களோ சாதி இந்து வீட்டின் பெண்களை/ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் போதுதான் இப்படிப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எல்லா சம்பவங்களிலுமே பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் இதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முன்வராததால், சாதி இந்து துவேஷம் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது.
ஆந்திர மாநில அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கவும், சாதி இந்துக்களின் சாதி ஆணவ கெளரவக் கொலைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்த மன்றத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.