பனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று 7 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அவற்றில் 3 மனுக்கள் நவாஸ் ஷரீப் சார்பிலும், தலா 2 மனுக்கள் மரியம் மற்றும் சப்தார் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டன.
அவன்பீல்டு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் சட்டக் குறைபாடுகள் உள்ளதால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவாஸ் ஷரீப், மரியம் உள்பட 3 பேர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பின்னரே அவர்களை விடுவிப்பது குறித்து கோர்ட் முடிவெடுக்கும் என தெரிகிறது.