மெக்சிகோவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு சிக்கன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி படுதோல்வியடைந்தது.
ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார்.
விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், இப்போதே பல சிக்கன நடவடிக்கை அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் மெக்சிகோ அதிபருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தான் அதிபராக பதவியேற்றதும் அதிபருக்கான ஊதியம் ரூ.4 லட்சமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார் என்பது குறிபிப்பிடத்தக்கது.