என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு தவறுகளால் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு ஆகஸ்டு 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தமிழக அரசு இப்போது காலநீட்டிப்பு கோருவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு தமிழக அரசு வக்கீல் விஜயகுமார், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பாக மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு முடிவடைந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்துவது சரியாக இருக்கும். அங்கு இடம் கிடைக்காத மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்க வசதியாக இருக்கும் என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள், ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பின் நகலை தாக்கல் செய்யுமாறு கூறி, இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.