“பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்”, என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
முதியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்றார். 440 பயனாளிகளுக்கு, ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-
இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் தலையாய கடமையாகும். பிள்ளைகளால் அவதிப்படும் முதியோருக்காகவே அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, கலெக்டர் வெ.அன்புச்செல்வன், வருவாய் அதிகாரி சு.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.