ஒருவயது பிள்ளைக்கு மதுபானம் புகட்டிய சம்பவம் தொடர்பில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மது அருந்தி விட்டு தன் கையில் வைத்திருந்த சிறுமிக்கும் மது புகட்டும் காட்சியொன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்ற இடம், சம்பந்தப்பட்ட நபர் என்பன தொடர்பில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 313 கனங்கமுவ எனும் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட சிறுமி தற்பொழுது வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுர நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுமி ஒரு வயதை உடைய ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.