பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக வன வாரத்தை முன்னிட்டு நடைபெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காடுகள் அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன. இந்த தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.
பூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும் கலந்துரையாடல், விவாதங்களை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும். இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவும் இருந்த போதும் அதனை வெற்றிகொள்வதற்கு அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன. தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது மொத்த நிலப்பிரதேசத்தில் 29 வீதமாக குறைவடைந்துள்ளது. பாரியளவிலான விவசாய முயற்சிகள் மற்றும் குடியேற்றங்களுக்காக காணிகள் பயன்படுத்துவதால் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் வனப் பிரதேசம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக பல சூழல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டாகும்போது நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடும் திட்டம், சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கின்ற வகையில் கடல்மட்டத்திலிருந்து 5000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை தடை செய்தல் மற்றும் அனைத்து பாடசாலை பிள்ளைகளும் குறைந்தது ஒரு மரக்கன்றை நாட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றார்.