இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், பிரான்ஸ் தூதரகம், ஜேர்மனிய தூதரகம், ரொமேனிய தூதரகம், இத்தாலி தூதரகம், நெதர்லாந்து தூதரகம், நோர்வே தூதரகம் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும், மரணதண்டனையை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அந்த அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளனர்.
மனித ஒழுக்கத்துக்கு எதிரான மரணதண்டனையை நிறைவேற்றுவதால் குற்றங்கள் குறைந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணதண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை கைவிடுமாறும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளனர்