உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.
உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
இதேபோல், நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியை உலகின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து ரசிகர்கள் கண்டு களித்தனர்.