ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா – பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டம்

229 0

ஹைதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எழுத்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் ஜாக் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். 

கரீபியன் கடல் தீவு நாடுகளில் ஒன்று, ஹைதி. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு கடந்த பிப்ரவரி மாதம், சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) ஒரு ஒப்பந்தம் போட்டனர்.

அப்போது எரிபொருளுக்கான மானியத்தை விலக்கிக்கொண்டால்தான், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கல் போன்றவற்றுக்கு நிதி கிடைக்கும் என சர்வதேச நிதியம் கூறியது.

இதையடுத்து எரிபொருட்களுக்கான மானியம் விலக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை 38 சதவீதமும், டீசல் விலை 47 சதவீதமும், மண்எண்ணெய் விலை 51 சதவீதமும் உயர்ந்தது.

இதை எதிர்த்து மக்கள் கடந்த சில நாட்களாக பெருமளவில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதில் வெடித்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இதன் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் ஜாக் பேசினார். அப்போது அவர் தான் பதவி விலகி விட்டதாக அறிவித்தார். பதவி விலகலை அதிபர் ஜோவேனெல் மெய்சே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Leave a comment