சென்னை ஆழ்வார்பேட்டையில் மூதாட்டியிடம் ‘என் தாய் மாதிரி இருக்கிறீர்கள்’ என்று உருகி பேசி 6 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்துச்சென்ற நபர், இளைஞரிடம் போலீஸ் எனக்கூறி 2 சவரன் நகையைப் பறித்துச்சென்றார்.
தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஜானகி(65). ஆழ்வார்ப்பேட்டை சீதம்மாள் காலனியில் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர் நேற்று வழக்கம்போல் தனது பணியை முடித்துக்கொண்டு சீதம்மாள் காலனி அருகே வந்துக்கொண்டிருந்தார்.
அப்படியா உன் அம்மா என்னைப்போல் இருப்பாரா? என்று ஜானகி கேட்க “உங்களைப்போல் அல்ல நீங்களே தான் என் அம்மா. என் அம்மாவே நேரில் வந்து பேசுவது போல் இருக்கிறது” என்று அழுதுள்ளார். “அழாதேப்பா அம்மா இப்ப எங்கே இருக்கிறார்கள்” என்று கேட்டுள்ளார்.
“அவங்க தவறிட்டாங்க ஒரு வருஷம் ஆச்சு அவங்களுக்குக்காக உழைச்ச பணத்தை எல்லாம் சேமித்து 10 சவரன் நகை செய்து எடுத்துட்டு போகும்போதுதான் இறந்த செய்தி வந்தது.
அம்மாவுக்கு ஆசைப்பட்ட நகையை போட முடியாத பாவி ஆயிட்டேனே” என்று மீண்டும் அந்த இளைஞர் அழுதுள்ளார். அழாதேப்பா என்று ஜானகி ஆறுதல் கூறியுள்ளார்.
அம்மாவுக்கு போட முடியலேன்னா என்ன அதான் என் அம்மாவே உங்கள் வடிவில் வந்துட்டாங்களே என்று கையிலிருந்த நகைப்பெட்டியை கொடுத்த அந்த இளைஞர் அந்த நகைகளை போட்டு உங்களை போட்டோ எடுத்து என் அம்மா ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ளப்போகிறேன் என்று கூறி அருகில் இருந்த கட்டிடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தாங்க நகைப்பெட்டி இதில் உள்ள நகைகள் புதுசு இதை போட்டுக்கொள்ளுங்கள் நான் போட்டோகிராபரை அழைத்து வருகிறேன் போட்டோ எடுக்கணும் என்று கட்டடத்தின் உள்ளே சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து போட்டோகிராபர் வெளியே போயிருக்கிறார் போன் செய்யணும் என்று செல்போனை கொடுங்க என்று செல்போனை கேட்டு வாங்கியுள்ளார்.
பின்னர் அம்மா உங்கள் பழைய நகைகளை கழற்றிவிட்டு புது நகைகளை போட்டுக்கொள்ளுங்கள், அதற்குள் நான் போட்டோகிராபருக்கு போன் செய்கிறேன் என்று ஜானகியிடம் இருந்த பழை நகைகளை கழற்றி வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வதுபோல் பாவனை செய்துள்ளார். கட்டடத்தின் உள்ளே போய் நகையை மாட்டி ரெடியாக இருங்கள் என்று தன்னிடம் உள்ள நகைப்பெட்டியை கொடுத்துவிட்டு போன் செய்வது போல் வெளியே சென்றுள்ளார்.
புது நகை என்பதால் இளைஞரின் தாய்ப்பாசத்தை எண்ணி மனம் உருகியபடி கட்டடத்தின் உள்ளே சென்று நகைபெ ட்டியை திறந்து நகையை எடுக்கலாம் என்று யோசித்த ஜானகி நகைப்பெட்டியை திறந்தபோது அதில் ஒன்றும் இல்லாதது கண்டு திடுக்கிட்டுள்ளார். உடனே வெளியே ஓடுவந்து பார்த்தால் அந்த இளைஞரை காணவில்லை. 6 சவரன் நகை, செல்போனுடன் அவர் சிட்டாக பற்ந்துவிட்டது தெரிய வந்தது.
இதுப்பற்றி ஜானகி தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில் பாண்டிபசாரில் அதே நபர் கைவரிசையை காட்டியுள்ளார். இந்தமுறை அவர் போட்ட வேஷம் போலீஸ். சாலையில் நடந்துச்சென்றுக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் என்ற இளைஞரை ஆட்டோவில் வந்த போலீஸார் மடக்கியுள்ளனர்.
நீதானே சேலையூரில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளையடித்தவன், ஏட்டையா இவன் தானே அது என்று ஆட்டோவில் வந்த மற்றொரு நபரிடம் கேட்க அட ஏம்பா நீ பேசிக்கிட்டிருக்க முதலில் ஆட்டோவில் ஏற்று ஸ்டேஷனுக்கு கொண்டுட்டுபோய் மற்றதை விசாரிப்போம் என்று உடன் வந்த நபர் கூற, பன்னீர்செல்வத்தை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
போலீஸ் என்பதால் எதிர்ப்பு காண்பிக்காமல் ஆட்டோவில் ஏறிய ப்ன்னீர்செல்வம், சார் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. என்று கூறியுள்ளார். எதுவும் பேசக்கூடாது, கொள்ளையடித்த பணம் நகைகளை எங்கே வைத்துள்ளாய் என்று மிரட்டிய அந்த நபர்கள், கையில் போட்டிருந்த 2 சவரன் மோதிரத்தை காட்டி இது என்ன திருடிய நகையா என்று மிரட்டியுள்ளனர்.
சார் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சேமித்து வாங்கியது சார் என்று பன்னீர்செல்வம் கூற, எல்லாம் தெரியுண்டா இப்படி எத்தனைப்பேரை நாங்கள் பார்த்துள்ளோம் என்று கூறிய அவர்கள் கைரேகையை முதலில் சோதிப்போம் என்று செல்போனில் கைரேகையை எடுத்துள்ளனர். அதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மோதிரத்தை கழற்றி வாங்கி வைத்துக்கொண்டனர்.
பின்னர் கைரேகை ஒத்துப்போகவில்லை, எப்போது கூப்பிட்டாலும் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்று கூறி அவசர அவசரமாக ஆட்டோவை விட்டு இறக்கியுள்ளனர்.
சார் என் மோதிரம் என்று பன்னீர்செல்வம் கூற, அதை ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள் என்று கூறி, ஆட்டோ பறந்துள்ளது. பன்னீர்செல்வம் பாண்டிபஜார் காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததைக்கூறி மோதிரத்தை கேட்டுள்ளார். போலீஸார் அவரிடம் யாராவது போலீஸ்னு சொல்லி மோதிரத்தை கேட்டால் கழற்றி கொடுத்துவிடுவீர்களா? போலீஸ் உங்கள் மோதிரத்தை எதற்கு வாங்கப்போகிறார்கள் என்று கூறி விபரத்தை கேட்டுள்ளனர்.
பன்னீர் செல்வம் நடந்ததைக் கூற அவரிடம் புகார் எழுதி வாங்கி மோசடி நபரை தேடி வருகின்றனர். பாண்டிபஜாரில் போலீஸ் என ஏமாற்றிய அதே நபர் கே.கே.நகரிலும் ஒருவரிடம் கைவரிசை காட்டியுள்ளார். அதுபற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நபர் 3 இடங்களில் கவனத்தை திசைத்திருப்பி நகைகளை பறித்துச் சென்றது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.