டெல்லியை தாக்க ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தீட்டிய சதித்திட்டத்தை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து இருப்பதாக பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான், துபாய், இந்தியா ஆகிய நாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய கண்காணிப்புக்கு பிறகு இந்த சதித்திட்டம் கண்டறியப்பட்டது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 12 பயங்கரவாதிகள், உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிய வந்தது.
அப்படி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி, டெல்லி விமான நிலையம், வசந்த் கஞ்ச் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களை தகர்க்க ஒத்திகை பார்த்தான். அவனை நீண்ட காலமாக கண்காணித்து வந்த பாதுகாப்பு படையினர், 2017-ம் ஆண்டு இறுதியில் கைது செய்தனர். பிறகு அவனை தங்களது உளவாளியாக மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தின் சதித்திட்டத்தை முறியடித்தனர்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அவன், அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். தலீபான்களுக்கு எதிரான போரில், அமெரிக்க ராணுவத்துக்கு அவன் உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.