பாதாள அறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் – விசாரணை நடத்த டெல்லி முதல்-மந்திரி உத்தரவு

246 0

பள்ளிக்கூடத்தின் பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள ஹவுஸ் காஷி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு மழலையர் வகுப்பில் படித்து வரும் குழந்தைகள் சிலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை தனியாக அழைத்து சென்று, பள்ளிக்கூடத்தின் கீழ் தளத்தில் உள்ள பாதாள அறையில் அடைத்துவிட்டனர்.

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாதாள அறையில் அடைத்துவைக்கப்பட்டதால் அந்த குழந்தைகள் அழுது அழுது சோர்வடைந்தனர். மாலையில் தங்களுடைய குழந்தைகளை அழைத்து செல்வதற்காக வந்த பெற்றோர் குழந்தைகள் மிகவும் சோர்ந்துபோய் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். குழந்தைகளிடம் விசாரித்த போது, அவர்களுக்கு நேர்ந்த கொடூரம் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூடத்தின் பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment