நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

255 0

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-2017-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற்கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

மாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016-2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.க. எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

நாங்கள் எந்த சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தோமோ, அதே சட்டமன்றத்திலிருந்து பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார்,லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது? மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகையாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் ஜெயக்குமார்.

இதே சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தி.மு.க. பேசிய போதெல்லாம், மத்திய அரசின் லோக்பால் சட்டத்திருத்தத்திற்காகக் காத்திருக்கிறோம் என்று காலங்கடத்தியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது உச்சநீதிமன்ற நெருக்கடியால், பெயரளவிற்கு ஒரு சட்டமுன்வடிவு, கூர்மையும் வலிமையும் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகையில் பல்பு இல்லையென்றால் இருண்டுதான் கிடக்கும். அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் பல்பு மட்டுமில்லை, மெயின் ஸ்விட்ச்சும் இல்லை, மின் இணைப்பும் இல்லை.

முழுமையான வலிமைமிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் தி.மு.க. வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.

ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்துவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?.உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவினால் விரைந்து வரும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment