கூட்டணி பற்றி ஆலோசித்து பின்னர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக, தேசிய செயலாளராக இருந்த திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருநாவுக்கரசர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.முன்னதாக திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை அறிவித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேச டெல்லி செல்கிறேன். நாளை காலை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறேன். நாளை மாலை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறேன்.
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடந்த வன்முறையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும், சேதமடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நஷ்டஈடு வழங்க வேண்டும்.தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு கொடுக்கும்.
காவிரி பிரச்சினையை இரு மாநில அரசுகளும் சட்டத்திற்குட்பட்டு தீர்வு காணவேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்களை பாதுகாக்கவேண்டும்.தமிழகத்தில் குறைவான கன்னடர்கள் தான் வாழ்கிறார்கள். அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதை தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறோம்.
கர்நாடகாவில் பெரும்பாலான தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். இதற்கு மத்திய -மாநில அரசுகளுக்கு பொறுப்பு உண்டு.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் டெல்லி செல்லும் நான் அங்குள்ள கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் வலியுறுத்துவேன்.
வருகிற உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. இதில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக போட்டியிடும். கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள தலைவர்களிடமும் தமிழகத்தில் உள்ள தலைவர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதனை உரிய நேரத்தில் அறிவிப்பேன்.தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கட்சியை பலப்படுத்த எல்லோரிடமும் இணைந்து செயல்படுவேன். எல்லோரின் கருத்துக்கும் மதிப்பளித்து கட்சியை நடத்தி செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.