பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாய் கடந்த 6-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த பிரச்சினையில் தலையிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 20 பேரையும் 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் சிக்கியுள்ள 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி, கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஆவார்.