லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தெரிவித்துள்ளார்.ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தனி நாடாக அறிவித்து செயல்பட்டுவருகின்றனர். மற்ற நாடுகளின் நிலப்பரப்புகளையும் கைப்பற்றி தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் லிபியாவிலும் ரகசிய பயிற்சி முகாம்கள் நடத்திய அவர்கள், அங்குள்ள சிர்தே நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர்.
சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா, தெலுங்கானாவைச் சேர்ந்த பலராம்கிஷன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.ஓராண்டுக்கும் மேலாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் தற்போது 2000 இந்தியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.