பெங்களூரில் கே.பி.என். பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய வன்முறையின் போது டீசவுசா நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்துக்கு சொந்தமான 42 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பெங்களூரில் உள்ள 9 தீயணைப்பு வண்டிகள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
42 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக கே.பி.என். நிறுவன டிரைவர்களில் ஒருவரான வெங்கடாசலம் என்பவர் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக முதலில் கூறப்பட்டதால், தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. கடந்த 2 நாட்கள் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு தீ வைப்பு குற்றவாளிகள் பற்றி தெரிய வந்தது.
டீசவுசா நகர் மற்றும் வீர பத்ரா நகரைச் சேர்ந்த 7 பேர் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று ரக்ஷித் (19), சதீஷ் (27), கிரண் (27), கெம்பேகவுடா (28), பிரகாஷ் (46), லோகேஸ் (25), சந்தன் (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்),435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நடத்திய வன்முறையில் கே.பி.என். நிறுவனத்துக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.
ஆனால் கடந்த 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்புக்குப் பிறகு ரூ.12 கோடி முதல் ரூ.14 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தீ வைத்து எரிக்கப்பட்ட 42 பஸ்களில் பெரும்பாலானவை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அந்த இன்சூரன்சு நிறுவன அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக எரிக்கப்பட்ட 42 பஸ்களையும் ஆய்வு செய்தனர்.
கே.பி.என். நிறுவனம் தினமும் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80 பஸ்களை இயக்கி வந்தது. அதில் பாதி பஸ்கள் எரிக்கப்பட்டு விட்டன. மீதி பஸ்கள் தமிழக பகுதிகளில் பத்திரமாக உள்ளன.
பெங்களூரில் முழுமையாக இயல்பு நிலை திரும்பும் வரை எந்த பஸ்சும் இயக்கப்பட மாட்டாது என்று கே.பி.என். நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜேஸ் தெரிவித்தார். ரத்து செய்யப்பட்ட பஸ்களில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.