தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது தொடர்பிலான பொது வாக்கெடுப்பையும், இரண்டாம் காலாண்டில் உள்ளூராட்சி தேர்தலையும் நடத்துவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் அவை. ஆக, 2017ஆம் ஆண்டின் ஆரம்பம், தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்குமாறு கோரவுள்ளது.
இலங்கையின் கடந்த கால அரசியலமைப்புக்களின் வடிவமைப்பிலோ, நிறைவேற்றத்திலோ தமிழ் மக்கள் தங்களைப் பங்காளிகளாக வைத்துக் கொண்டதில்லை. அல்லது அதனை, பௌத்த – சிங்கள மைய சக்திகள் அனுமதித்ததில்லை. தாம் இணங்காத- பங்களிக்காத அரசியலமைப்புக்களே தங்களைத் தொடர்ந்தும் அடக்கி, ஆண்டு, அலைக்கழித்து வந்ததாக தமிழ் மக்களுக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலான வெப்பியாரம் உண்டு. அதுதான், போராட்டங்களின் தோற்றத்துக்கும் நீட்சிக்கும் வழிகோலின. ஆனால், இம்முறை தமிழ் மக்களின் ஏக அபிமானம் பெற்ற தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் முக்கிய பங்காளிகளாக இணைந்திருக்கின்றது. இந்த விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முக்கியமானதாகும்.
தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு மற்றும் நிறைவேற்று அதிகாரத்தினை பாராளுமன்றத்திடம் வழங்குதல் உள்ளிட்ட மூன்று விடயங்களே புதிய அரசியலமைப்பில் முக்கிய அம்சங்களாகக் கவனம் பெறுகின்றன. இதில், தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான உரையாடல்கள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டன. அதுபோல, பாராளுமன்றத்துக்கான அதிகாரத்தினை மீள் உறுதி செய்வது தொடர்பிலான விடயங்களும் குறிப்பிட்டளவில் பேசப்பட்டு விட்டன. ஆனால், அரசியல் தீர்வு தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவில் கூட இன்னமும் உரையாடப்படவில்லை. ஆனால், புதிய அரசியலமைப்பினை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெரும் ஆர்வம் கொண்டிருக்கின்றார். குறிப்பாக, புதிய அரசியலமைப்புக்கு எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் பெற வேண்டும் என்று அவர் கருதுகின்றார். அதற்கான நெருக்குதல்களை அரசியலமைப்பு வழிகாட்டுதல் குழுவுக்குள்ளும், உப குழுக்களுக்கு உள்ளும் அவர் வழங்கி வருகின்றார்.
“2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு கிடைத்துவிடும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தல் காலத்திலிருந்து தொடர்ந்து கூறி வருவதன் இறுதிக் கட்டம் புதிய அரசியலமைப்பினூடு கடக்கப்பட்டுவிடும். 2016ஆம் ஆண்டுக்குள் இறுதித் தீர்வு என்கிற விடயத்தை வைத்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு நிறைவான உரையாடல்களைச் செய்வதற்குப் பதிலாக, பெரும்பாலும் நக்கல்- நையாண்டிகளையே செய்து வந்திருக்கின்றது. நக்கலும்- நையாண்டியும் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற போது, இன்னொரு பக்கம் இறுதித் தீர்வு என்கிற பெயரில் ஒற்றையாட்சிக்குள் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அடக்குவதற்கான வேலைத் திட்டங்கள் வெகு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதோ என்கிற சந்தேகம் எழுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தற்போது, அதிகமான கவனம் பெறவேண்டிய விடயங்களில் ஒன்றாக புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் இருக்கின்றது. ஆனால், அதனைக் கவனம் செலுத்துவதிலிருந்து தவறியிருக்கின்ற தமிழ் ஊடகங்களும் அரசியல் தரப்பினரும் சிறிய நிறுவனங்கள் – பாடசாலை அதிபர் பிரச்சினைகளுக்குள் அதிக காலத்தைச் செலவிட்டு அலைக்கழிந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும் இப்படியான கவனக் கலைப்பான்களில் அதீத அக்கறை கொண்டு தொடர்ச்சியாக கோட்டை விட்ட பெருமை தமிழ்த் தரப்புக்கு உண்டு.
மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ என்கிற அரசியல் உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், ‘ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி’ என்கிற விடயத்தைத் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக முன்வைப்பது தொடர்பில் தன்னுடைய தீர்க்கமான கருத்தொன்றை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ‘ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி’ என்கிற விடயத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளும் விடயமாகவே அதனைக் கொள்ள முடியும். வடக்கு- கிழக்கு மக்களை நோக்கி ‘ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குதல்’ பற்றிய விடயங்களைத் தென்னிலங்கை மாத்திரமல்லாமல், தமிழ் மக்களின் ஏக அங்கீகாரம் பெற்ற தரப்புக்களையும் வைத்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட ஆரம்பித்து விட்டன.
இதன் இன்னொரு கட்டம் அண்மையில் மாத்தறையில் அரங்கேறியது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற ரீதியில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்கிற வகையில் நாடு பிளவுபடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதனை உறுதிமொழியாகவே வழங்குகின்றேன். முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும். அதுபோல, மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.” என்றார். கிட்டத்தட்ட தற்போது இருக்கின்ற மாகாண முறைமைக்கு ஒப்பான விடயமொன்றையே அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் கோருகின்றார்கள் என்கிற முன்வைப்பினையே தென்னிலங்கையில் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார். இந்த உரை, தமிழ் அரசியல் தளத்தினாலோ, ஊடகப் பரப்பிலோ அவ்வளவு கவனம் பெறவில்லை.
அண்மையில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வைத்து சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில தீர்க்கமான விடயங்கள் பற்றி பேசியதாக தகவல் வெளியிடப்பட்டது. குறிப்பாக, தமிழ் மக்களின் ‘சுயாதீனம்’ உறுதி செய்யப்படும் படியான அரசியலமைப்பொன்றை தென்னிலங்கை கொண்டு வருவதற்கான அழுத்தத்தை ஐக்கிய நாடுகள் வழங்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கூறியதாகத் தகவல் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் சர்வதேச பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுடனான சந்திப்புக்களில் இந்த அளவுக்கு உறுதியாக இரா.சம்பந்தன் பேசியதைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், தென்னிலங்கையுடனான இழுபறியின் போது அவர் அவ்வளவு வெற்றிகரமானவராகச் செயற்படுகின்றாரா என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இப்படியானதொரு கட்டத்தில், தேர்தல் முறை மாற்றங்களின் போது வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் வகையிலான யோசனைகளையே தென்னிலங்கை உறுதி செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். வடக்கு- கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. தேர்தல் முறை மாற்றங்களினால் பாதிக்கப்படும் தமிழ்- முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் காப்பது தொடர்பில் ஆரம்பத்திலேயே கூட்டமைப்பு ஏன் அக்கறை கொள்ளவில்லை? தேர்தல் முறை மாற்றங்களின் போதே உரையாடல்களைச் செய்யாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தென்னிலங்கையின் பௌத்த- சிங்கள மையம் கொந்தளிக்கும் சமஷ்டி பற்றிய உரையாடல்களை எப்படிக் கையாளும்? அதற்கான வலுவினை அது கொண்டிருக்கின்றதா? என்று தொடர் கேள்விகள் எழுகின்றன.
“அரசியலமைப்புப் பேரவை வழிகாட்டல் குழு மற்றும் உப குழுக்களின் சந்திப்புக்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரிதாகக் கருத்துக்களை முன்வைப்பதில்லை. அதிக நேரங்களில் மௌனிகளாக அனைத்தையும் கவனிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், அரசியல் தீர்வு பற்றிய உரையாடலின் போது மஹிந்த அணியின் எதிர்வினைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.” என்று அரசியலமைப்பு பேரவை வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இனமுரண்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்பதில் ரணில் விக்ரமசிங்க பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றார். அதிகாரங்கள் சார்ந்து தமிழ் மக்கள் எதிர்காலத்தில் போராட்டத்தினை முன்னெடுக்கவும் கூடாது என்றும் கருதுகின்றார். அதனை, தென்னிலங்கை ஆதிக்கத்தின் போக்கிலேயே கையாளவும் நினைக்கின்றார். இந்த இடத்தில், இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கூட்டமைப்பும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக மாறி வருகின்றார்கள். அந்தக் கேள்விகள் 70 ஆண்டு காலங்களுக்கும் மேலான போராட்டங்கள், அர்ப்பணிப்புக்கள் சார்ந்தவை.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அண்மையில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நோக்கி கடுந்தொனியில், “நாட்டில் மிகக் குறைந்த நாட்களில் இல்லாமற் போகாத இனமான பௌத்த – சிங்களவர்களுக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியிருக்கின்றார்.
நாடொன்றில் சிறுபான்மையாகவுள்ள இனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்தே விசேட உரிமைகள் பற்றிய கோரிக்கைகள் எழுந்து வந்திருக்கின்றன. ஆனால், பௌத்த – சிங்கள மையங்கள், ஒரே இலங்கை மற்றும் பௌத்த – சிங்கள மையவாதத்தினை முன்னெடுத்துச் செல்வதில் கொஞ்சமும் பின்நிற்கவில்லை. இப்படியான இறுக்கமான நிலைக்குள் மௌனிகளாக மாத்திரம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளை அடைந்துவிடுமா? சாத்தியங்களுக்கான வெளியைக் காண முடியவில்லை!
புருஜோத்மன் தங்கமயில்