வடக்கில் எல்.ரீ.ரீ அமைப்பையோ தெற்கில் பயற்கரவாத அமைப்பையோ மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர்,
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது குறித்து தமது தீர்மானங்களை அறிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சி மற்றும் அரசியல் ரீதியில் விஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடந்த 3 வருட காலத்தில், கொலை, கொள்ளைகள், துஷ்பிரயோகங்கள் என்பன பாரியளவில் குறைந்துள்ளன. பொலிஸார் தமது உயிரை பனையம் வைத்து பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிகின்றனர்.
நாட்டில் குற்றச்செயல்களை இல்லாதொழிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே இன்று வடக்கில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வகையில் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.