இங்கிலாந்து நாட்டில் வட மேற்கு லண்டன் நகரில் நீஸ்டன் பகுதியில் சுவாமி நாராயண் என்ற பள்ளி கூடம் ஒன்று கடந்த 1992ம் ஆண்டு இந்து மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது.
இதனை அக்ஷார் கல்வி சேவை அமைப்பு தொடங்கியது. இந்த பள்ளி கூடத்தில் 3 முதல் 18 வயது வரையிலான 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 2020ம் ஆண்டு ஜூலையில் இருந்து கல்வி பிரிவில் இருந்து முழுவதும் வெளியேற முடிவு செய்து இந்த அமைப்பு கடந்த மாதம் பள்ளி கூடத்தினை மூடும் அறிவிப்பினை வெளியிட்டது.
இதுபற்றி பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதில் கடினம், மாணவர்களை இலவச அடிப்படையில் சேர்த்து கொள்ளும் அரசு உதவி பெறும் இந்து பள்ளி கூடங்கள் கிடைக்க பெறுவது, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆகியவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் நிபுணர்கள் சிலர், மறுகட்டமைப்பு செய்வதனால் வருங்காலத்திலும் பள்ளியை நடத்துவது சாத்தியப்படும் என தெரிவித்துள்ளனர். பள்ளி கூடம் மூடப்படாமல் தடுக்கும் வகையில் பள்ளி கூடத்தின் மாணவ மாணவியர்களின் பெற்றோர் கையெழுத்து பிரசாரம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் 3,500 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது.