மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை!

327 0

வவுனியா, யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21-06-2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா யாழ். வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம்.

பகிடிவதை குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பகிடிவதை குறித்து வளாகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ முறைப்பாடுகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

பகிடிவதை குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது மாணவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை அதன் காரணமாக பகிடிவதை சட்டங்கள் இருந்தும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பிரயோக விஞ்ஞான பீட அவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Leave a comment