இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்

389 0

இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அநேக விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தினையும் கோரியிருந்த போது அக்கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது ஆகவே அரசாங்கமானது தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது என்பதனையும் வலியுறுத்தினார்.

கடந்தகால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்யும் முகமாக ஒரு புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதின் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் உள்ள அம்சங்களில் இது உள்ளடக்கப்பட்டுள்ளதனையும் எடுத்துக்காட்டினார்.

புதிய யாப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளதினை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களில் தமது சொந்த மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக தேவைப்படும் அணைத்து அழுத்தங்களையும் கொடுக்கும் அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மந்த கதியில் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் எமது காணிகளில் இராணுவம் பண்ணைகள் நடாத்துவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகையான பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காணி விடுவிப்பு தொடர்பிலான முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல் அரசாங்கமானது முடிவுகளை எடுத்து அவற்றினை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

மேலும் கருது தெரிவித்த இரா. சம்பந்தன் அரசாங்கமானது தீவிரவாத போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை கொடுக்கின்றமையானது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைகின்றமையையும் எடுத்துக்கூறினார்.

இந்த அரசாங்கத்தினை பதவிக்கு கொண்டுவருவதில் பெரும்பங்காற்றிய எமது மக்கள் கடந்த காலத்தில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்ட முடியாமையினால் அதிருப்தி அடைத்துள்ளார்கள் என தெரிவித்த இரா சம்பந்தன் எமது இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் ஒரு சில விடயங்கள் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தினை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார் .

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் நாங்கள் முழு இராணுவத்தினையும் குற்றவாளிகள் என்று கூறவில்லை ஆனால் நிச்சயமாக பாரிய குற்றங்களை இழைத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியிருந்தாலும் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என இதன்போது கருது வெளியிட்ட ஐ நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்ப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

Leave a comment