தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அலுவலகத்தில் இம் மூன்று முறைப்பாடுகளும் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்துகொண்டுள்ளதால் அவரை உடன் கைது செய்யுமாறு சிங்ஹல ராவய அமைப்பு முறைப்பாடு ஊடாக பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.
அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை மீறும், பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புரிந்துள்ளதாக கூறி அவரை உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உண்மையை கண்டறியும் அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடளித்துள்ளது.
நேற்று காலை கோட்டையில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற சிங்ஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடளித்தனர்.
மூன்று நாட்களுக்குள் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாக தாம் நீதிமன்றை நாடவுள்ளதாக முறைப்பாடளித்த பின்னர் மாகல்கந்தே சுதத்த தேரர் கூறினார்.
இதேவேளை சட்டத்தரணிகளை உள்ளடக்கிய உண்மையை கண்டறியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த தலைமையில் பொலிஸ் தலைமையகம் சென்ற சட்டத்தரணிகள் குழுவும் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் முறைப்பாடு செய்தது.
அத்த முறைப்பாட்டில் , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்தை மீறியுள்ளதாகவும் நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் , தண்டனை சட்டக் கோவையின் 114, 115 ஆம் அத்தியாயங்களின் கீழும் விஜயகலா மகேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரின் கூற்றானது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் பிரகாரமும் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் சாதாரண ஒருவர் இக்குற்றங்களை செய்தால் பொலிஸார் எவ்வாறான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களோ அதனை விஜயகலா மகேஸ்வரனின் விடயத்திலும் நடை முறைப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.