விஜயகலா தெரிவித்தது அரசாங்கத்தின் கருத்து- ஜே.வி.பி

395 0

பொது மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பிரிவினைவாத அறிவிப்பொன்றை மேற்கொண்டுள்ள விஜயகலா மஹேஷ்வரனுக்கு எந்தவித உரிமையும் இல்லையெனவும், இவரின் இந்த அறிவிப்புக்காக முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இவரின் இந்த அறிவிப்பை மக்கள் விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. இது பயங்கரமான ஒரு கருத்தாகும். மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு இவ்வாறு கூறுவதற்கு அவருக்கு உரிமை இல்லை. நாட்டைப் பிரிப்பதற்கு இடமளிப்பதில்லையென நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்தே பதவியை ஏற்கின்றோம்.

அவர் இந்த சத்தியப்பிரமாணத்தை உடைத்துள்ளார். இவர் குறித்து மிக விரைவில் விசாரணை நடாத்த வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவைக் கூட்டி உடன் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு செய்ய வில்லையானால் நாட்டுக்கு தவறான முன்மாதிரியை வழங்கியவர்களாக மாறுவோம்.

இதுபோன்ற அறிவிப்புக்கள் மற்றும் சிலராலும் முன்வைக்கப்படுகின்றன. நாட்டு இன்று அராஜக நிலைக்குச் சென்றுள்ளது. இடத்துக்கிடம் மனித கொலைகள் இடம்பெறுகின்றன. வங்கிக் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. எல்.ரி.ரி.ஈ. மனித உரிமைகளைப் பாதுகாக்க வில்லை. அவர்கள் செய்த கொடூர செயல்கள் பற்றி நாம் அறிகின்றோம்.

புலிகளினால் சிறுவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இவர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தது ஜனாதிபதி நடமாடும் சேவையில் வைத்து என்பது மற்றொரு விடயமாகும். இன்னும் இரு அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள். இவரது உரை அரசாங்கத்தின் கருத்தாகக் கூட இருக்கலாம். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment