புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் சம்மேளனத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளதால் அரசாங்கத்துக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாக விமல் வீரவன்ச மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்து இதுதொடர்பாக தெரிவித்துள்ளார்.
ஆனால் மகாநாயக்க தேரர் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பாக அறிந்துள்ளமையால் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்கள் அவரிடம் எடுபடவில்லை.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியலமைப்பு மூலம் ஒருபோதும் நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம் என இரண்டுபேறும் உறுதியளித்துள்ளதாகவும் தேரர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பை வைத்து சிங்கள மக்களை குழப்புவதற்கே இவர்கள் மகாநாயக்க தேரரிடம் சென்றுள்ளனர்.
ஆனால் மகாநாயக்க தேரரின் பதில் மூலம் விமல் வீரவன்ச மூக்குடைக்கப்பட்டுள்ளார் எனவும் அஸாத்சாலி குறிப்பிட்டுள்ளார்.