பிணங்களை எரியூட்டும் பணி செய்யும் பிதா மகள்!

370 0

போடியில் இறந்தவர்களின் உடல்களை சற்றும் கூச்சமின்றி எடுத்து அடக்கம் செய்து வரும் பெண்மணி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இயக்குனர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் வெட்டியான் வேலை பார்த்து வருவார். சுடுகாட்டிலேயே தங்கி அங்கேயே சாப்பிட்டு வாழ்க்கையை நடத்துவார். இது ஆணுக்கு மட்டும் பொருந்தாது பெண்ணாலும் செய்ய முடியும் என ஒருவர் நிரூபித்துள்ளார்.

சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் எத்தனை தைரியசாலியாக இருந்தாலும் இரவு நேரத்தில் தனியாக செல்ல அச்சப்படுவார்கள். ஆனால் ஒரு பெண் அங்கேயே தங்கி தனது குடும்பத்துக்காக உழைத்து வருகிறார் என்ற செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

மதுரை மாவட்டம் ஆணையூரைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 32). இவருக்கும் போடியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது தொழில் துணிகளை சலவை செய்து கொடுப்பதாகும். போடியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கொட்டக்குடி ஆற்றங்கரை ஓரத்தில் குடிசை போட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சொந்த வீடு இல்லாததால் சுடுகாடு அருகிலேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதனால் சுடுகாட்டு பகுதியில் வசிப்பது ஆரம்பத்தில் முருகேஸ்வரிக்கு பயமாக இருந்துள்ளது.

ஆனால் வாழ்க்கையே இனி இப்பகுதியில்தான் என முடிவான பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ கற்றுக் கொண்டார். ஆனால் வறுமை இவர்கள் குடும்பத்தை துரத்திக் கொண்டே வந்தது. சலவைத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் ரேசன் கடையில் வழங்கும் இலவச அரிசியை வாங்கி பசியை போக்கினர்.

இருந்த போதும் குடும்பத்தின் மற்ற தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் 2012-ம் ஆண்டு போடி சுடுகாடு நகராட்சி எரிவாயு தகன மேடையாக மாற்றப்பட்டது. இங்கு பிணங்களை எரியூட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரியார் சமத்துவ மையத்தின் சார்பில் முருகேஸ்வரியை வெட்டியான் வேலைக்கு தேர்வு செய்தனர். பல ஆண்டுகளாக இதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் என்பதால் சமத்துவ மையத்தின் நிர்வாகிகள் முருகேஸ்வரி மற்றும் அவரது கணவருக்கு பணியை ஒதுக்கினர்.

மயானத்தின் அருகே குடிசை போட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கார்டு, பெறுவதில் சிக்கல் எழுந்தது. ரேசன் கார்டில் விலாசம் குறித்த விபரத்தில் சுடுகாடு என எழுதப்பட்டு இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கார்டு கொடுக்க மறுத்தனர். அதன் பிறகு நிலைமையை எடுத்து கூறி தங்கள் வசிப்பிடத்தின் புகைப்படத்தையும் அளித்து ரேசன் கார்டு பெற்றனர்.

சுடுகாட்டில் பணியாற்றி வந்ததால் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் கருப்பையாவின் கண்பார்வை குறைந்து அவரால் வேலை செய்ய இயலாத நிலை உருவானது. கணவரையும் பராமரித்து தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி குடும்பத்தையும் முருகேஸ்வரியே தற்போது கவனித்து வருகிறார்.

இதுகுறித்து முருகேஸ்வரி தெரிவிக்கையில், இதுவரை 1,890 சடலங்களை எரியூட்டியுள்ளேன். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை மண்ணில் புதைத்து காரியங்கள் செய்துள்ளேன். ஆரம்பத்தில் சுடுகாட்டில் வசிக்கவே பயந்த எனக்கு தற்போது இதுவே தாய்வீடு போல மாறிவிட்டது. எனது சுகம், துக்கம், மகிழ்ச்சி என அனைத்தையும் குடும்பத்துக்காக ஒதுக்கி வாழ்ந்து வருகிறேன். என் குழந்தைகள் 2 பேரும் நல்ல முறையில் படித்து வேலைக்கு சேர்ந்தால் போதும். அதுவே எனது லட்சியமாக கருதுகிறேன் என்றார்.

ஆணுக்கு பெண் எதிலும் சளைத்தவர் இல்லை என்பதை பல வி‌ஷயங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் இது போன்ற ஒரு பெண் மணியை பார்க்கும் போது சற்றே வித்தியாசமாக தெரிந்தாலும் உழைக்க மறுக்கும் பலருக்கு உத்வேகமாக விளங்குகிறார்.

Leave a comment