காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலும், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதில் ராணுவமும் ஈடுபடுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை நிராகரித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒருதலைப்பட்சமானது எனக்கூறி கண்டனமும் பதிவு செய்தது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத்திடம், ஐ.நா. அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் மனித உரிமை அறிக்கை குறித்து பேசுவதற்கு தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நன்கு தெரியும். காஷ்மீர் மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரியும்’ என்று கூறினார்.
எனவே ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கூறிய பிபின் ராவத், இத்தகைய சில அறிக்கைகள் தூண்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்திய ராணுவத்தின் மனித உரிமை பேணும் தரவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் தெரிவித்தார்.