பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ‘செல்போன்’ உரையாடல் அவருடைய குரல் தானா? என்று பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி நிர்மலாதேவிக்கு சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்காக ஐகோர்ட்டு மதுரை கிளையில் போலீசார் அனுமதி பெற்றனர். இதற்காக நிர்மலாதேவியை ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்துச்செல்வதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை தனி வேன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை சென்னை அழைத்துவந்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார். அங்கு அவருடைய குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. அப்போது அவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபோது, என்ன பேசினாரோ? அதை அப்படியே சிலமுறை பேசச்சொல்லி, தடய அறிவியல் நிபுணர்கள் ஆடியோவில் பதிவு செய்வார்கள்.
அதன்பின்னர் நிர்மலாதேவி ஏற்கனவே பேசி வெளியான செல்போன் உரையாடலுடன், தற்போது பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒப்பிட்டுப்பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த சோதனை முடிந்தவுடன் நிர்மலாதேவியை மீண்டும் தனி வேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.