தபால் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தபால் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் நள்ளிரவு முதல் பணிப்பகீஷ்கரிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் சேவைகள், மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட ஏனைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானித்ததாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், அமைச்சர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாது விடத்து எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த 10ம் திகதி கூட்டு தபால் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக, இலங்கையின் தபால் சேவை ஸ்தம்பிதமடைந்தது. இந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி; 24 தபால் தொழிற்சங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.