தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ சான்றிதழை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்வதை காட்டாயமாக்க உத்தரவிடக்கோரி ஆனைமலையை சேர்ந்த எஸ்.வி.சுப்பைய்யா கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வழக்கு குறித்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்வதாகவும், அதற்கு 10 நாட்கள் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி கிருபாகரன், அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரை பணிக்கு சேரும் முன்னர் மருத்துவ சான்று சமர்ப்பிக்கின்றனர். ஆனால் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? ; என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளதென்றும், மேலும் தேர்தல்களில் வேட்பாளர் யாரென்று பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை என்றும், மாறாக சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், அரசியல் ஒருசில குடும்பத்தினருக்கு மட்டும் என்று இருக்கக் கூடாது. தமிழகத்தில் 1967 முதல் திரைத்துறை சம்பந்தபட்டவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளதாகவும், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தபோது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். குண்டர்களுக்கும், நில அபகரிப்பாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்திருந்தால் தான் அரசியல்கட்சியை பதிவு செய்ய வேண்டுமென தகுதி நிர்ணயிக்க வேண்டுமென கூறினார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தத்தை ஆணையம் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.