அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து, அதனை முன்மொழிந்து பேசியதாவது:-
மத்திய அரசு, 2010-ம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் ஜெயலலிதா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக பிரதமரை கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.
இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது. இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.
அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக்கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரியவில்லை.
முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.
உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.
இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஜெயலலிதா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இந்த மசோதா அவசர கதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை.
இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சினைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு, அனுப்பிய கடிதத் தில் கேட்டுக் கொண்டேன்.
அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடை யூறுகள் ஏற்படும். மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
“மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித்தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்-அமைச்சரின் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சபாநாயகர் இந்த தீர்மானத்தை, ‘ஆதரிப்போர் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என்க’ என்றார். அதனை தொடர்ந்து அவையில் இருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆம்’ என்று கூற, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வரைவு மசோதாவால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படும். எனவே மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது.
மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் 15.6.2018 அன்று தங்களுக்கு (பிரதமருக்கு), அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டேன். மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இந்த மசோதாவில் சில அம்சங்கள் இருக்கிறது. எங்கள் மாநிலத்தின் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக நல்ல முடிவை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடித்தத்துடன் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ளது.