மாணவர்களின் பாச போராட்டம் வென்றது: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி

1543 0

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவலில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.

இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர்ந்து 10 நாட்கள் பணியாற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். மாணவர்கள் ஆசிரியர் பகவானை வழிமறித்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அமைதிபடுத்த பகவானுக்கு வழங்கிய பணி விடுவிப்பு கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்து எறிந்தார்

இதையடுத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அமைதியாகி கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணி விடுவிப்பு கடிதம் வழங்கப்பட்டு அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுபணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார்.

Leave a comment