வீட்டுத்திட்டத்தை சீனாவிடம் வழங்கியது சரியான நடவடிக்கை- சுவாமிநாதன்

5521 0

வடக்குகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனா நிறுவனத்திடம் கையளித்ததை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் நியாயப்படுத்தியுள்ளார்.

வடக்குகிழக்கில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனாவிடம் இலங்கை வழங்கியது குறித்து இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தீவிரபரிசீலனைக்கு பின்னரே வீடமைப்பு திட்டத்தினை சீனா நிறுவனத்திற்கு வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு 40000 வீடுகளை அமைக்கும் பொறுப்பு சீனா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நிறுவனம் இரண்டுவருடங்களில் வீடமைப்பு திட்டத்தினை பூர்த்திசெய்ய இணங்கியுள்ளது, இதன்காரணமாக வீடுகள் அவசரமாக தேவைப்படும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களிற்கான வீடுகளைகட்டும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ள அதேவேளை இன்னமும் 160,000 வீடுகள் தேவைப்படுவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியிலேயே சீனா நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள  அமைச்சர் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டம் மூலம் 7000 பேரிற்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment