இடம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் விடயத்தில் ரிசாத்- சத்தியலிங்கம் முறுகல்

8315 0

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், மாவட்ட இணைத்தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.

வவுனியா மாவட்ட ஓருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை வீட்டுத்திட்டம் வழங்கி குடியமர்த்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களே அதிகம் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் றிசாட் தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழ் மக்களும் 1990 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்தனர். வவுனியாவில் கள்ளிக்குளம், மேற்குளம், பெரியபுளியங்குளம், சின்னக்குளம், இளமருதங்குளம், ஊஞ்சல் கட்டி, வெடிவைத்தகல், வீமன்கல் போன்ற பகுதிகளில் வசித்த மக்களும் 90 இற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள். தற்போது எல்லைப் பிரதேசமாகவுள்ள அந்த பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் உங்களுடைய கட்சி தானே அந்த மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றது. எதிர்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். அதைவிடத்து இதில் அதனை பேசுவதில் பயனில்லை என்றார்.

இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம், நீங்களும் வன்னியில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தான் பாராளுமன்றம் சென்றீர்கள். அந்த மக்களுக்கு பதில் கூற வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்கிறது என்றார். இதன்போது நான் அந்த மக்களுக்கு எதிராக கூறவில்லை. அவர்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என அமைச்சர் தெரிவித்ததுடன் அந்த விடயம் முடிவுக்கு வந்தது.

Leave a comment