ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்மானித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிரதிவாதி சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்தார்.
எவ்வாறாயினும் அந்த உத்தரவின் பிரதி இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனக் கூறிய நீதிபதி அதன் பிரதியை ஜூலை மாதம் 09ஆம் திகதி மன்றில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அதேநேரம் சாட்சியளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சாட்சியாளர்களை விடுவிப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.