சிறுபோகத்திற்கான உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை

258 0

எந்தவித தட்டுப்பாடும் இன்றி சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகளுக்கென விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாய அமைச்சு முன்னர் திட்டமிட்ட வகையில் உற்பத்திக்குப் பொருத்தமான இரண்டு இலட்சம் நெல் காணிகளுக்கு இந்த உரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.இருப்பினும் மழை பெய்ததன் காரணமாக இம்முறை சிறுபோக உற்பத்திக்கென ஐந்து இலட்சத்து 38 ஆயிரத்து 399 ஹெக்டேயர் வயல் காணிகளில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரமானியம் எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கப்படவேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய உரம் தொடர்பாக செயலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக, அரசாங்கம் சிறுபோக நிவாரண நடவடிக்கையின் கீழ் விநியோகிக்கப்படவுள்ள உரத்தின் அளவு ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 179 மெற்றிக்தொன்களாகும். இம்முறை சிறு போகங்களுக்காக 9ஆயிரத்து 551 மில்லியன் ரூபாவுக்கு மேலான தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நெல் உற்பத்திக்காக வழங்கப்படும் ஒரு உரப்பொதியின் விலை 500 ரூபாவாகும். இதனை விவசாய மத்திய நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும். ஏனைய உற்பத்திகளுக்காக 1500 ரூபாவிற்கு உரப்பொதி விற்பனை செய்யப்படுகிறது.

Leave a comment