அரசியலில் தான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எனவும், இதனை நான் இந்த நாட்டு மக்களிடமும், விசேடமாக மகா சங்கத்தினரிடமும் இந்த நள்ளிரவில் வைத்து ஒரு வாக்குறுதியாக கூறிக் கொள்கின்றேன் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நேற்று (25) நள்ளிரவு தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
இதன் கருத்து, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தாங்கள் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக, எந்தவொரு கருத்தையும் வெளியிடும் நடவடிக்கையிலும் கலந்துகொள்ள மாட்டீர்கள் என்பதா? என தேரரிடம் நேர்காணலை நடாத்திய ஊடகவியலாளர் வினவினார்.
அரசியலில் ஈடுபட்டு ஒரு கட்சியின் வாக்குப் பலத்தை உடைப்பது தேரராக இருந்து செய்ய முடியுமான ஒரு நடவடிக்கை அல்ல என தேரர் பதிலளித்தார்.
தங்களுக்கு இராஜயோகம் ஒன்று இருப்பதாக தங்களது அமைப்பின் தேரர் ஒருவரே கூறியிருந்தார் என தேரரிடம் ஊடகவியலாளர் கூறிய போது,
ஒரு விகாரையின் விகாராதிபதியாக வருவதும் இராஜயோகம் தான். பாடசாலையின் அதிபராக வருவதும் இராஜயோகம்தான். இருப்பினும், அரசியல் எமக்குரிய இடமல்ல என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.
நாம் அரசியல் வாதிகளுக்கு சமமாக இருக்கக் கூடியவர்கள் அல்லர். மாறாக, அரசியல்வாதிகளுக்கு ஆலோசகர்களாகவே இருக்க வேண்டும். எமக்கு அரசியல்வாதிகளுடன் கலந்துரையாட எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டின் கல்வி, சுகாதாரம், கலாசாரம் என்பன வீழ்ச்சியடைந்துள்ளன. மனிதர்களுக்கு இந்த நாடும் அரசியலும் வேண்டாத ஒன்றாக மாறியுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த நாட்டை விட்டும் செல்வதற்கு மக்கள் தயாராகவுள்ளனர். ஒரு தொகு மக்கள் உண்ணும்போது, இன்னுமொரு தொகுதி மக்கள் உண்ண வழியில்லாதிருக்கின்றனர். அனைத்தும் மாறியுள்ளன. இவற்றுக்கே நாம் தீர்வு தேட வேண்டியுள்ளோம்.
தேரர்கள் என்ற வகையில், நாம் ஆன்மீக ரீதியிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டியவர்கள் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.