gnaகோட்டாபய ராஜபக்ஷ என்பவர் ஒரு விடயத்தை இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒருவர். அதனைச் செயற்படுத்த முடியுமான ஒருவர். இதனால், அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை இருந்தது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நேற்று (25) நள்ளிரவு தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பிலும், இந்த நாட்டை ஆக்கிரமிக்க அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைள் குறித்தும் நாம் உண்மைகளை வெளிக் கொண்டுவந்தபோது அவற்றை சிறந்த முறையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் புரிந்துகொண்டார்.
இதனடியாக ஏனைய இன குழுக்களிடையே நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமரச் செய்தார். இவர் மாத்திரம் தான் இந்த மத்தியஸ்தத்தை முன்னெடுத்தார்.
உலமா சபையையும், எம்மையும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடினார். இருதரப்பினரதும் பிரச்சினைகளைக் கூறுமாறு கூறினார். பின்னர் அது குறித்து அவர் கலந்துரையாடினார்.
இதன்போது அவர் முடிவாக ஒன்றைக் கூறினார். இந்த நாடு 30 வருட யுத்தமொன்றை முடித்து விட்டு இப்போதுதான் மூச்சுவிட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்னுமொரு இரத்தம் ஓட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம். தயவு செய்து இதனை கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வர உதவுங்கள் என தெளிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவர் மாத்திரம் தான் இப்பிரச்சினையைப் புரிந்துகொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். ஏனைய அரசியல் தரப்பினர் சகலரும் இது போன்ற பிரச்சினைகளின் போது அரசியல் லாபம் அடைய முயற்சித்தனர். அல்லது அரசியல் லாபங்களை அடைந்துகொள்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் பிரச்சினைகளை உருவாக்கினர் எனவும் தேரர் மேலும் கூறினார்.