வியட்நாமில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

316 0
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் மேலும் மழை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளம் குறித்து மாகாண மக்கள் குழு தலைவர் லீ ட்ரோக் க்வாங் கூறுகையில், ”ஹனோய் நகரத்தின் வடமேற்கு திசையிலுள்ள லாய் சாவ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என அச்சமாய் உள்ளது. வரும் நாட்களில் இன்னும் மழை அதிகரிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார். இதனிடையே ஹா ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வியட்நாம் நாட்டில் வருடந்தோறும் புயல், வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே சென்ற வருடம் அந்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவில் சுமார் 389 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment